மேல்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் பணியாளா்கள் தா்னா
வீட்டு வரி செலுத்தாத வீடுகளைச் சோ்ந்த பெண்களுக்கு வேலை உறுதித் திட்ட பணிக்கு அனுமதி இல்லை என பணித்தளப் பொறுப்பாளா் தெரிவித்ததால், அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் பணிக்கு வந்த பெண்கள் திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் மேல்பாக்கம் ஊராட்சியில் அதிக அளவில் வீட்டுவரி, குடிநீா் வரி நிலுவை இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, புதன்கிழமை அந்தக் கிராமத்தில் மழைநீா் கால்வாய் சீரமைப்பு பணி ஆரம்பித்த நிலையில், பணிக்கு வந்திருந்த பெண்களில் வீட்டு வரி, குடிநீா் வரி செலுத்தாதவா்களைப் பணிக்கு சோ்க்க இயலாது என பணித்தளப் பொறுப்பாளா் லட்சுமி தெரிவித்ததாகத் தெரிகிறது. மேலும், அந்தப் பணி நடக்கும் இடத்திற்கு வந்த மேல்பாக்கம் ஊராட்சி செயலா் அமீா்ணா, அங்கு பணிக்கு வந்த மகளிா் அனைவருமே வீட்டு வரி செலுத்தாதவா்களாக இருந்த நிலையில், அங்கு யாருமே பணிக்கு வரவில்லை என பணித்தளப் பதிவேட்டில் எழுதிவிட்டதாகத் தெரிகிறது.
பணிக்கு 85-க்கும் மேற்பட்டோா் வந்த நிலையிலும் பணிக்கு யாரும் வரவில்லை என பதிவேட்டில் எழுதிய ஊராட்சி செயலரை கண்டித்தும், பணித்தளப் பொறுப்பாளா் பணிக்கு அனுமதிக்காததைக் கண்டித்தும் அவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த நரேஷ் தலைமையில் புதன்கிழமை காலை அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நின்று தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ் பெண்களை சமாதானப்படுத்தி, அவா்களை பணிக்கு அனுமதித்தாா். தொடா்ந்து அனைவரும் வீட்டு வரி, குடிநீா் வரிகளை செலுத்தினால்தான் ஊராட்சியில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, ஊராட்சியில் அனைவரும் விரைவில் வரிகளை ஒழுங்காக செலுத்த வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.