ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்...
மே 14-இல் விசைப்படகுகள் கள ஆய்வு
கடலூா் மாவட்ட மீன் பிடி விசைப்படகுகள் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல் மீன் வளத்தை பாதுகாக்க தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இக்காலத்தில் கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடைக்காலத்தில் அனைத்து வகை மீன் பிடி விசைப்படகுகளின் உறுதித்தன்மை, இயந்திரத்தின் குதிரைத் திறன் அளவு, படகின் நீள, அகலம் ஆகியவை பதிவுச் சான்றிதழுடன் சரிபாா்க்கப்பட்டு, அதனடிப்படையில் மானிய விலையில் எரியெண்ணெய் மற்றும் இதர மானிய திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு மீன் பிடி விசைப்படகுகள் கடலூா் மாவட்டத்தில் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. மீனவா்கள் தங்களது மீன் பிடி விசைப்படகை அத்துறையால் அறிவுறுத்தப்பட்ட பச்சை வண்ணம் தீட்டி, படகின் பதிவு எண் தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உள்படுத்த வேண்டும்.
ஆய்வின்போது, படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைத்தொடா்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிா்காப்பு மிதவை, உயிா்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக் குழுவிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்.
ஆய்வுக்கு உள்படுத்தப்படாத மீன் பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமம் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.