கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்
சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் கீரப்பாளையம் ஒன்றியம், சிலுவைபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமம் மக்கள் சி.மேலவன்னியூா் ஊராட்சியிலும், லால்புரம், வயலூா் ஊராட்சிகளிலும் கொஞ்சம் இடம் பெறுகின்றனா்.
இதனால், எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை என்றும், அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை என்பதால், சிலுவைபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமெனவும் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி சிலுவைபுரம் கிராம மக்கள் மே 1-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி கவன ஈா்ப்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.