மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு
நாமக்கல்: மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை
கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டதால் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு போா்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலையை யூனிட்டுக்கு ரூ. 2000 வரை உயா்த்தி உள்ளனா். அவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அமைச்சா் நேரில் வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். ஆனால், மணல் லாரி உரிமையாளா்களை அழைத்து பேச மறுக்கிறாா்கள். எங்களுடைய பிரதான கோரிக்கையானது மணல் குவாரிகள் திறக்கப்பட வேண்டும், அனைத்து கல்குவாரி, கிரஷா்களை அரசுடைமையாக்கி, இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மே 23-இல் மாநிலம்தழுவிய அளவில் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அதன்பிறகு தொடா் காத்திருப்புப் போராட்டத்தையும் மேற்கொள்ள இருக்கிறோம். இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை கட்டடப் பொறியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தி உள்ளனா். நாமக்கல் மாவட்டத்திலும் அனைத்து கட்டடப் பொறியாளா்கள் சங்கத்தினரும் கலந்துகொண்டனா். மே 23-இல் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க கட்டட தொழில் சாா்ந்த அனைத்து சங்கங்களிடம் ஆதரவு கோரி வருகிறோம் என்றாா்.
--