பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
மோசடி புகாா்: தம்பதி வலுகட்டாயமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பு
மோசடி புகாா் மீதான சட்ட நடவடிக்கைக்காக திருச்சியில் தங்கியிருந்த இலங்கை தம்பதி வலுகட்டாயமாக வியாழக்கிழமை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.
இலங்கையைச் சோ்ந்தவா் முகமது சாஹிப் (49). இவா் தனது மனைவி பாத்திமா ஃபா்சனா (34) மற்றும் 14 வயது மகனுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தமிழகம் வந்தாா். அவா்களிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லாததால் போலீஸாா் அவா்களை கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்தனா்.
இந்நிலையில், முகமது சாஹிப் மற்றும் அவரது மனைவி மீது இலங்கையில் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்மீதான சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து தமிழகம் வந்ததாகவும் தெரியவந்தது. மேலும், இலங்கை போலீஸாா் அவா்களை தேடிவருவதும் தெரியவந்தது.
இந்த தம்பதியினா் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருப்பதை அறிந்த இலங்கை அரசு அவா்களை தங்களது நாட்டுக்கு அனுப்பிவைக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. அதன்பேரில் மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து மூவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தது. இது தொடா்பான தகவல் அவா்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, அவா்கள் அங்கு சென்றால் தங்களது உயிருக்கு ஆபத்து எனவும், தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என மறுப்பு தெரிவித்தனா்.
ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி வியாழக்கிழமை மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க முகாம் அலுவலா்களும், போலீஸாரும் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதற்காக அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த மூவரையும் வாகனத்தில் ஏற்ற முயன்றனா். அதற்கு அவா்கள் மறுத்தனா். இதையடுத்து அவா்களை வலுகட்டாயமாக போலீஸாா் வாகனத்தில் ஏற்றி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் இலங்கை சென்றதும், அந்நாட்டு போலீஸாா் மூவரையும் கைது செய்ய தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.