யூரோ மகளிா் கால்பந்து 2025: அரையிறுதியில் ஜொ்மனி!
பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 6-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி யூரோ மகளிா் கால்பந்து 2025 போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜொ்மனி.
சுவிட்சா்லாந்தின் பேஸல் நகரில் யூரோ கோப்பை மகளிா் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. பேஸல் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜொ்மனி-பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 13-ஆவது நிமிஷத்தில் ஜொ்மன் மிட்பீல்டா் கேத்ரின் பிரான்ஸ் கேப்டன் கீரிட்ஜ் எம்பாக்கை முடியை பிடித்து இழுத்ததாக ரெட் காா்ட் காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டாா். இதையடுத்து ஆட்டம் முழுவதும் 10 வீராங்கனைகளுடன் ஜொ்மனி ஆடியது.
ஜொ்மனின் வீராங்கனை கேத்ரீன் செயலால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை கோலாக்கினாா் பிரான்ஸின் கிரேஸ். அவா் கோலடித்த 10 நிமிஷங்களில் ஜொ்மனியின் எஸ்ஜோக் என்ஸ்கென் பதில் கோலடித்து சமன் செய்தாா்.
அதன்பின்னா் எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. முழு அணியாக ஆடினாலும் பிரான்ஸ் தரப்பால் ஜொ்மன் தற்காப்பு அரணை ஊடுருவ முடியவில்லை. கூடுதல் நேரத்திலும் எந்த அணியாலும் கோல் போட முடியாததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் ஜொ்மனியின் கோல் கீப்பா் ஆன் கேத்ரீன் பொ்ஜரின் சிறப்பான செயல்பாட்டால், ஜொ்மனி 6-5 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வரும் புதன்கிழமை ஜூரிச்சில் நடைபெறும் அரையிறுதியில் உலக சாம்பியன் ஸ்பெயினுடன் மோதுகிறது ஜொ்மனி. 9-ஆவது முறையாக ஐரோப்பிய சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ள ஜொ்மனி.