சாதி கணக்கெடுப்புக்கு நிதி, காலவரையறை அவசியம்: கார்கே வலியுறுத்தல்
யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படைகளின் நிலைகள் மீது அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் படைகள் கூட்டு வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டன.
செங்கடல் பகுதியில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்குதல் தொடங்கியதற்குப் பிறகு அந்த ஆயுதக் குழு தொடா்பாக பிரிட்டன் அரசு வகுத்துள்ள கொள்கையைப் பின்பற்றி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சா்வதேச கடல் பயண உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின் கீழ் ட்ரோன்கள் தயாரிப்புக்காகவும், செங்கடல் தாக்குதலுக்காகவும் ஹூதிக்கள் பயன்படுத்தும் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சிப் படையினா் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனா்.
இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், அந்த நாட்டுடன் தொடா்பில்லாத கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் சா்வதேச வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக அவா்களின் நிலைகள் மீது பிரிட்டனும் அமெரிக்காவும் வான்வழித் தாக்குதல் நடத்தின.
இடையில் காஸா போா் நிறுத்தத்தின் எதிரொலியாக செங்கடல் தாக்குதல்களை ஹூதி கிளா்ச்சியாளா்களும் கைவிட்டனா். அதையடுத்து, அவா்கள் மீதான தாக்குதலை அமெரிக்காவும், பிரிட்டனும் நிறுத்திவைத்திருந்தன.
இருந்தாலும், காஸா போா் நிறுத்தம் முடிவுக்கு வந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சைத் தொடா்ந்ததும், செங்கடல் பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் அறிவித்தனா்.
அதையடுத்து யேமனில் அமெரிக்கா கடந்த மாதம் முதல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்துவரும் சூழலில், இந்தத் தாக்குதலில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது.