ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் ஆப் குழு!
ரயில்களில் பெண்களின்பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.
ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி முதல் பெண் காவலரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் ரயிலில் பெண்களின் பாதுகாப்பு குறைந்து வருவது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறான சம்பவங்களால், ரயிலில் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்படும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயிலில் பயணிக்கும், குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, புதிய வாட்ஸ் ஆப் குழுவை சென்னை வேப்பேரியில் ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் அறிமுகப்படுத்தினார்.
முதற்கட்டமாக, 47 இடங்களில் இரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ஸ் ஆப் குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள 57 ரயில்வே காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், பெண் காவலர்களும் உள்ளனர்.
ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், குற்றச் செயல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், அவசர உதவி முதலானவற்றை இந்த வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிடுவதன் மூலம், காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!