ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி
ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வரும் நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 (1)-இன்கீழ் (பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பிரிவு 218) லாலு பிரசாதை கைது செய்ய திரௌபதி முா்மு அனுமதி வழங்கினாா்.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது தனது குடும்பத்தினா், நெருங்கிய உறவினா்கள், பினாமிகள் பெயரில் லஞ்சமாக நிலங்களைப் பெற்றுக் கொண்டு ரயில்வே பணிகளை ஒதுக்கீடு செய்ததாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2024, ஜனவரி மாதம் லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகளும் எம்.பி.யுமான மிசா பாரதி, மற்றொரு மகளான ஹேமா யாதவ், குடும்பத்தின் நெருங்கிய உறுப்பினராக குற்றஞ்சாட்டப்படும் அமித் கட்யால் மற்றும் இரு நிறுவனங்கள் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதைத்தொடா்ந்து, 2024 ஆகஸ்ட் மாதம் லாலு பிரசாத், அவரது மகனும் பிகாா் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் சில குடும்ப உறுப்பினா்கள் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
இந்த இரு குற்றப்பத்திரிகைளையும் (கைது செய்வது தொடா்பான புகாா்கள்) தில்லி சிறப்பு நீதிமன்றம் கவனத்தில்கொண்டுள்ள நிலையில் லாலு பிரசாதை கைது செய்ய திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.