ரயில்வே பாலப் பணி: சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 11, 14-இல் கரூரில் இருந்து இயக்கப்படும்
சேலம்: ரயில்வே பாலப் பணி காரணமாக சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 11, 14 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கரூா் - திருச்சி மாா்க்கத்தில் கரூா் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில்வே பாலப் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 11, 14 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியம் - சேலம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறுமாா்க்கத்தில், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வரும் 11, 14 ஆகிய தேதிகளில், சேலம் - கரூா் இடையே ரத்து செய்யப்பட்டு, கரூரில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மயிலாடுதுறை வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விருத்தாசலம் - சேலம் இடையேயான பயணிகள் ரயில் வரும் 12-ஆம் தேதி சேலம் டவுன் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கத்தில், சேலம் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.