ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட்!
அமிர்தசரஸ் - கட்டியார் எக்ஸ்பிரஸ் (15708) ரயில் கடந்த புதன் கிழமை இரவு, டெல்லியில் இருந்து பீகாரில் உள்ள சிவானுக்கு சென்று கொண்டிருந்தது. இதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஷேக் மஜிபுலுதீன் (38) என்பவர் கொடூரமாக தாக்கப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெல்ட் போன்றவற்றால் கடுமையாக தாக்கப்பட்ட அந்தப் பயணி செயலற்று கிடப்பது வீடியோவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து பிரோசாபாத் ரயில்வே காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது.
இதற்கிடையில், ரயில் பெட்டி பராமரிப்பாளர் விக்ரம் சவுகான், மற்றொரு உதவியாளர் சோனு மெஹ்தோவும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இவர்கள் இருவர் மீதும் ரயில்வே காவல்துறை பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 115 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 351(2) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மேலும், டிக்கெட் பரிசோதகர் ராஜேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஃபிரோசாபாத் நிலைய அதிகாரி சுஷில் குமார், ``பாதிக்கப்பட்ட பயணி எம்1 பெட்டியின் 43வது பெர்த்தில் செல்லுபடியாகும் டிக்கெட்டுடன் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் பெட்டியின் உதவியாளர்கள் விக்ரம் சவுகானும், சோனு மெஹ்தோவும் அவருடன் நட்பு கொண்டார்.
அவர் அவர்களுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார். மூவரும் சேர்ந்து மது அருந்த ஏற்பாடு செய்து, மது அருந்தியிருக்கின்றனர். அப்போது மூவருக்கு மத்தியில் வாய்மொழி வாக்குவாதம் ஏற்பட்டு, வன்முறையாக மாறியிருக்கிறது. இதை விசாரிக்க டிக்கெட் பரிசோதகர் உள்ளே வந்தபோதுதான், அவரும் ரயில் பெட்டியின் உதவியாளர் என நினைத்து பயணி ஷேக் மஜிபுலுதின் அவரை அடித்திருக்கிறார். இதைக் காரணமாக வைத்துதான் அவரைக் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். அந்த சம்பவம் சக பயணிகளால் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.