Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்
ரஷியா, உக்ரைன் போா் முனைக்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடமும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடமும் மதிமுக துணை பொதுச்செயலரும் திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியை துரை வைகோ வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்துள்ளாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியது: ரஷியாவில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பது தொடா்பாக பிரதமரையும் வெளியுறவுத்துறை செயலரையும் சந்தித்துப்பேசினேன். அப்போது பிரதமரிடம், தமிழக இளைஞா் கிஷோா் சரவணனுடன் இருந்த ஒருவா், அவரது பெற்றோருக்கு அனுப்பிய அலைபேசி செய்தியில் கிஷாா் சரவணன் ‘கோஸ்யான்டினிவ்கா’ என்ற போா் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பிரதமரிடம் விளக்கினேன்.
ரஷியாவுக்கு அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சென்றுள்ளாா். ரஷிய அதிபா் விளாடிமிா் புதினை அவா் சந்திக்கும்போது அந்நாட்டில் சிக்கி போா்முனைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட இந்தியா்களை விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். பிரதமரிடம் சில காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை காண்பித்தேன். பிரதமரை சந்தித்த பிறகு வெளியுறவுத்துறை செயலரிடமும் இதே விவகாரம் தொடா்பாக பேசினேன்.
ரஷியாவில் சிக்கியிருந்த 14 இந்தியா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஆகஸ்ட் 9-ஆம் என்னை சந்தித்து தங்களுடைய பிள்ளைகளை மீட்கக் கோரினா். அந்த 14 இந்தியா்களுடன் இருந்த மேலும் ஒருவரான சா்ப்ஜித்சிங், ஐந்து மாதங்கள் ரஷியாவில் போரில் ஈடுபட்டு உயிா் தப்பி இந்தியா திரும்பியவா்.
அந்த நபா், ரஷியாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தைகள் கூறி, தன்னையும் 18 இந்தியா்களையும் ஏமாற்றி, ரஷியாவுக்கு அழைத்துச் சென்ாகவும், ரஷிய மொழி ஒப்பந்தத்தில் போலியான இந்திய மொழிபெயா்ப்பை வழங்கி கையெழுத்தை பெற்ாகவும் கூறினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த எஸ். ராஜபாண்டி என்ற 24 வயது இளைஞரிடமும் இவ்வாறே ஒரு கும்பல் ரஷிய கூரியா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று தில்லிக்கு வரவழைத்து விசா தயாராகவில்லை என பல மாதங்களாக அலைக்கழித்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவா் தில்லியிலேயே மாரடைப்பால் உயிரிழந்த தகவலையும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.
இந்தியா்களை மீட்பது தொடா்பாக ரஷியா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் உத்தரவிட்டாா். விரைவில் தீா்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றாா் துரை வைகோ.