ராகுலின் நடைப்பயணப் பேரணியில் நகர்ப்புற நக்சல்கள்! மகாராஷ்டிர முதல்வர் குற்றச்சாட்டு!
ராகுலின் பாரத் ஜோடோ நடைப்பயணப் பேரணியில் நகர்ப்புற நக்சல்கள் பங்கேற்றதாக தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்டபாரத் ஜோடோ என்ற மாபெரும் பேரணியில் நகர்ப்புற நக்சல்கள் பங்கேற்றதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியதாவது, ``நேபாளத்தின் காத்மாண்டுவில் நவம்பர் 15 ஆம் தேதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மகாராஷ்டிரம் உள்பட பாஜக ஆளும் பிற மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்ப்பது, பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவது முதலான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.
மேலும், தேர்தலின்போது ராகுல் நடத்திய பேரணியில் பங்கேற்ற 180 அமைப்புகளில் 40 அமைப்புகள் நகர்ப்புற நக்சல்களின் முன்னணி அமைப்புகளாக பெயரிடப்பட்டுள்ளன. குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மன்மோகன் சிங் ஆட்சியின் போது, மக்களவையில் 72 முன்னணி அமைப்புகளை மத்திய அரசு குறிப்பிட்டது. அவற்றில் 7 அமைப்புகள் பாரத் ஜோடோ பேரணியின் ஒரு பகுதியாக இருந்தன.
இதையும் படிக்க:ராகுலுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர். அல்ல; அம்பேத்கருக்கு எதிரானது! காங்கிரஸ்
அதுமட்டுமின்றி, தேர்தல்களில் வெளிநாட்டு தலையீட்டிற்கான சான்றுகள் உள்ளன. தேர்தல்களில் பயங்கரவாத நிதி பயன்படுத்தப்பட்டது குறித்து பயங்கரவாத தடுப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இருப்பினும், மகாராஷ்டிர முதல்வரின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பாரத் ஜோடோ பேரணியை இழிவுபடுத்தும் முயற்சி என்று கூறிய காங்கிரஸார், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்களை உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கும் விதமாக பாரத் ஜோடோ என்ற பெயரில் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வரை 4,080 கி.மீ. தூரம் வரையில் சுமார் 150 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.