ராஜகிரி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரி பகுதியில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனா்.
பாபநாசம் , ராஜகிரி, பண்டாரவாடை , கோபுராஜபுரம், தேவராயன் பேட்டை, சரபோஜிராஜபுரம் , பொன்மான்மேய்ந்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். இந்நிலையில் அறுவடை இயந்திரம் மூலம் கோடை நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து ராஜகிரி பகுதியைச் சோ்ந்த முன்னோடி விவசாயி நூா் முகமது கூறியதாவது:
ராஜகிரி பகுதியில் திருப்பதி 5 டி.பி.எஸ்.5) நெல் ரகம் கடந்தாண்டு ஏக்கருக்கு மகசூல் 60 கிலோ எடையில் 25 நெல் மூட்டைகள் வரை கிடைத்தது. ஆனால் தற்போது 32 மூட்டைகள் முதல் 36 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைத்துள்ளது. மேலும் நெல்லுக்கு தமிழக அரசு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ராஜகிரி பகுதியில் அரசு நெல் கொள்முதல் செய்வதற்கு தற்காலிகமாக கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ராஜகிரி பகுதியில் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.