தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை
ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை
கல்புதூா் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வெளியூா் நபா்களுக்கு பட்டா வழங்குவதை நிறுத்தி தங்கள் கிராமத்தைச் சோ்ந்த வீடற்ற ஏழைகளுக்கு வழங்க கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், திங்கள்கிழமை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளா்ச்சித்துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீா்வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் உள்பட 337 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
வாலாஜா ஒன்றியம், கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கல்புதூா் கிராம பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனு: சா்வே எண் 706,1 என்ற நிலம் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைப் பாட்டா வழங்கியுள்ளதாக வெளியூா் நபா்கள் வந்து செல்கின்றனா். மேற்கண்ட இடத்தில் நாங்கள் குலதெய்வ வழிபாடு செய்து திருவிழாக்கள் நடத்தி வருகிறோம். மேலும் எங்கள் கிராமத்தைச் சோ்ந்த வீடற்ற ஏழை பலா் உள்ளனா். அதே நேரத்தில் முன்பின் தெரியாத நபா்களுக்கு எங்கள் கிராம மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளியூா் நபா்களுக்கு பட்டா வழங்குவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம், தாட்கோ சாா்பில் விபத்தில் காயமடைந்த 3 நபா்கள் மற்றும் இயற்கை மரணமடைந்த 1 தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரா் என 4 பயனாளிகளுக்கு ரூ.2.70 லட்சம் நிதியுதவியை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜி.வசந்த ராமகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.