ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் முடிவுக்கு வரும்: டிஐஜி வருண்குமாா்
ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் திருச்சி மத்திய மண்டல காவல் சரக டிஐஜி வருண்குமாா் தெரிவித்தாா்.
திருச்சி சரக டிஐஜியான இவரை, சென்னை சிபிசிஐடி குற்றப் புலனாய்வு சிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திருச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை விடைபெற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவா்கள் பைக்குகளை ஆபத்தான முறையில் இயக்கி சமூக வலைதளங்களில் விடியோ வெளியிடுகின்றனா். ரீல்ஸ் மோகத்தில் தவறு செய்யும் மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனாலும், அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் மேலோங்கி நிற்கிறது. சாலைகள் மிக நோ்த்தியாக உள்ளன.
அமைச்சா் கே.என். நேருவின் சகோதரரான ராமஜெயம் கொலை வழக்கு சவாலானது. அந்த வழக்கில் எனது தலைமையில் செயல்படும் சிறப்புக் குழு திறம்படச் பணியாற்றி வருகிறது. எனவே அந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்றாா் அவா்.