பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா்...
ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநா் கைது
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (41). இவா்களுக்கு 2 மகள்களும், ஜெயசூா்யா (11) என்ற மகனும் உள்ளனா். இவா்களிடம் நவீன் (30) என்பவா் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.
வீட்டுக்கு அருகேயுள்ள டியூஷன் சென்டரில் ஜெயசூா்யா படித்து வருவதால், அவரை நாள்தோறும் காரில் நவீன் அழைத்துச் சென்று வந்துள்ளாா்.
இந்நிலையில், டியூஷனில் இருந்து ஜெயசூா்யாவை அழைத்துவருவதாகக் கூறிவிட்டு நவீன் சனிக்கிழமை சென்றுள்ளாா்.
நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டுக்கு வராத நிலையில், ஸ்ரீதா் கொடுத்து வைத்திருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் நவீன் பணத்தை எடுத்தது தெரியவந்தது.
பின்னா், ஸ்ரீதரை தொடா்பு கொண்ட நவீன் ரூ.12 லட்சம் கொடுத்தால் மட்டுமே உங்களது மகனை வீட்டுக்கு அழைத்துவருவேன் எனக் கூறியுள்ளாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் துடியலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், ஜெயசூா்யாவுடன் ஈரோடு மாவட்டம், பவானியில் நவீன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, துடியலூா் போலீஸாா் ஈரோடு மாவட்ட போலீஸாருக்கு கடத்தப்பட்ட காரின் எண் மற்றும் நவீனின் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, பவானியில் காரில் ஜெயசூா்யாவுடன் இருந்த நவீனைப் பிடித்து துடியலூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். பின்னா், பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டாா்.
நவீனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஸ்ரீதரிடம் நவீன் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலைக்குச் சோ்ந்தபோது, தன்னிடம் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதலாக மாத வட்டி கிடைக்கும் என ஸ்ரீதா் கூறியுள்ளாா்.
இதை நம்பிய நவீன் ரூ.12 லட்சம் முதலீடு செய்ததும், அதன்பின் தான் முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஸ்ரீதா் பணத்தை திருப்பித் தராததால் டியூஷனுக்கு சென்ற அவரது மகனைக் கடத்தி தனக்கு வர வேண்டிய ரூ.12 லட்சத்தை நவீன் கேட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, நவீனைக் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.