ரூ. 1.73 கோடியில் கிராம சாலைப் பணி தொடக்கம்
ரூ.1.73 கோடியில் கிராம சாலைக்கான பணியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்).
புதுவை பொதுப் பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள ஓடைவெளி கிழக்குக் கடற்கரை சாலை முதல் சின்ன வீராம்பட்டினம் வரை 3.50 கி. மீ. தொலைவுக்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதுவை அரசு திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, ரூ. 1.73 கோடிக்குப் பணி தொடங்கியது.
முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் மற்றும் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் முன்னிலையில் இதற்கான பூமி பூஜை
நடத்தப்பட்டது. பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வம், செயற்பொறியாளா் ந. சந்திரகுமாா், உதவிப் பொறியாளா் நடராஜன் மற்றும் சரவணன், இளநிலைப் பொறியாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.