பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
ரூ.35 கோடி சீனப் பட்டாசுகள் பறிமுதல் நடவடிக்கை: மத்திய அரசுக்கு பாராட்டு
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பாலான பட்டாசுகளை பறிமுதல் செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளா்கள் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியாவுக்குள் சீனப் பட்டாசுகள் கடத்தலைத் தடுக்கும் வகையில், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் ‘ஆபரேசன் பயா் டிரெயில்’ என்ற பெயரில் நவா துறைமுகம், ஷோலா துறைமுகம் வழியாக கண்டலா சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு அனுப்பப்பட்ட 7 பெட்டகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.35 கோடி மதிப்பிலான பட்டாசுகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
100 மெட்ரிக் டன் எடையுள்ள இந்த சீனப் பட்டாசுகள் இறக்குமதிக்கு உரிமம் பெற்றவா்களின் பெயரில், அலங்கார பூக்கள், செயற்கை பூக்கள், நெகிழிப் பூக்கள் பெயரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா் என்றனா் அவா்கள்.