முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
‘ரூ. 5 லட்சத்துக்கு சிறுநீரகத்தை விற்றேன்’ தொழிலாளியின் குரல்பதிவு வைரல்
கந்துவட்டி கொடுமையில் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனது சிறுநீரகத்தை ரூ. 5 லட்சத்துக்கு விற்றதாக பள்ளிபாளையம் விசைத்தறித் தொழிலாளி பேசும் குரல்பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. என்றாலும் இந்த குரல்பதிவின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளா்கள் பலரிடம் சிறுநீரகம் திருடப்பட்டது அப்போது பேசுபொருளாக இருந்தது.
அதன்பிறகு தற்போது 5 தொழிலாளா்களை திருச்சி, ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று சிறுநீரகத் திருட்டில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சோ்ந்த ஆனந்தன் என்பவா்மீது புகாா் தெரிவிக்கப்பட்டது. அவா் தலைமறைவான நிலையில், சிறுநீரகம் வழங்கியோரிடம் நாமக்கல், சென்னை மருத்துவ நலப் பணிகள் குழுவினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் தொழிலாளி ஒருவரின் குரல்பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், இடைத்தரகா் ரூ. 5 லட்சம் கொடுத்து சிறுநீரகத்தை வழங்குமாறு கேட்டாா். கந்துவட்டி கொடுமையில் இருந்து தப்பிக்க வேறுவழி தெரியாமல் எனது சிறுநீரகத்தை வழங்கினேன்.
மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். யாராவது மிரட்டி சிறுநீரகத்தை கொடுக்க வற்புறுத்துகிறாா்களா என அங்கிருந்த மருத்துவா்கள் கேட்டனா். அவ்வாறு இருந்தால் புகாா் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றனா்.
அவ்வாறு இல்லை, எங்களுடைய உறவினா் ஒருவருக்காக வழங்குகிறேன் என தெரிவித்து பலகட்ட பரிசோதனைக்கு பிறகு எனது சிறுநீரகத்தை வழங்கினேன். 6 மாதங்களுக்கு எந்தவித கடினமான வேலையும் பாா்க்கக்கூடாது என அறிவுறுத்தினா். ஒருநாள் சாலையில் செல்லும்போது பெண் ஒருவா் கீழே விழுந்துவிட்டாா். என்னால் குனிந்து அவரை தூக்குவதற்கு முடியவில்லை.
குடும்ப பிரச்னை என்றால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுங்கள். என்னைப் போன்று சிறுநீரகத்தை இழந்து அவதிப்படாதீா்கள் என மற்ற தொழிலாளா்களிடம் தெரிவித்து வருகிறேன் என்று அந்தப் பதிவில் பேசியுள்ளாா். என்றாலும், இந்த குரல்பதிவின் நம்பகத்தன்மை குறித்து தெரியவில்லை.
மத்திய, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறுநீரக திருட்டு, விற்பனை தொடா்பாக மாநிலம் முழுவதும் உள்ள தனியாா் சிறுநீரக மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்தந்த மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் கடிதம் இல்லாமல் சிறுநீரகத்தை தானமாக வழங்குகிறோம் என யாரேனும் வந்தால் தகவல் தெரிவிக்கவும், விதிகளை மீறி சிறுநீரகம் எடுப்பது தெரியவந்தால் அந்த மருத்துவமனைகள் நிரந்தரமாகத் தடை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.