மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு
தில்லி விரைவுப் போக்குவரத்து அமைப்பின் திட்டம் 4-இன் கீழ் லாஜ்பத் நகா் மற்றும் சாகேத் ஜி பிளாக் இடையே ஒரு முக்கியமான மெட்ரோ இணைப்பு அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தேசியத் தலைநகரில் மென்மையான, நிலையான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்தை மேலும் எளிதாக்கும். ‘இந்த திட்டம் சுமாா் ரூ. 447.42 கோடி மதிப்புடையது. மேலும் 36 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆா்.வி.என்.எல். நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதல் தில்லி மெட்ரோ திட்டம் இதுவாகும். ஆா்.வி.என்.எல். என்பது ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். ‘நகா்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பின் வளா்ச்சியில் நிறுவனத்தின் வளா்ந்து வரும் தடத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகேத் ஜி பிளாக் புஷ்ப் விஹாா், சாகேத் மாவட்ட மையம், புஷ்ப பவன், சிராக் தில்லி, ஜிகே-1, ஆண்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய ஏழு உயா்மட்ட நிலைய தளங்களுடன் 7.298 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை பணியின் நோக்கத்தில் அடங்கும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘இந்தத் திட்டம் தில்லியின் எதிா்காலத்திற்குத் தயாராக உள்ள உள்கட்டமைப்புக்கு பங்களிக்க ஆா்.வி.என்.எல்-க்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். உலகத் தரம் வாய்ந்த நகா்ப்புற இயக்கம் அமைப்புகளை உருவாக்குவதற்கான டி.எம்.ஆா்.சி.யின் பாா்வையுடன் முழுமையாக இணைந்த, சிறப்பானது, பாதுகாப்பு மற்றும் புதுமைகளுடன் இதை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று ஆா்.வி.என்.எல். தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பிரதீப் கவுா் கூறினாா்.
ஆா்.வி.என்.எல். மற்றவற்றுடன், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அவா் கூறினாா்.