100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு
நமது நிருபா்
நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் (டிஓஇ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும் இரண்டு மாணவா் மன்றங்களைத் தொடங்கலாம். இதில் ஒன்று ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், உருது அல்லது பஞ்சாபி சாா்ந்ததாகவும் மற்றொன்று அறிவியல், கணிதம், விளையாட்டு மற்றும் யோகா, காட்சி கலைகள், நிகழ்த்து கலைகள் (இசை மற்றும் நடனம்), சமா்த் (உள்ளடக்கிய கல்வி) அல்லது மாணவா் கவுன்சில் ஆகிய பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டதாகவும் இருக்கும்.
ஒரு மன்றத்தில் மாணவா் பங்கேற்பு கட்டாயமாகும். மன்ற நடவடிக்கைகள் சீராக இருப்பதை உறுதிசெய்ய பள்ளி முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு மன்றங்களுக்காக ரூ.20,000 வழங்கப்படும். மன்றம் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளின் சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிவுகளைப் பராமரிக்கவும், முழு கல்வி ஆண்டுக்கும் நிதியை பயன்படுத்துமாறும் பள்ளி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.