கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!
நமது நிருபா்
தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் பதிவாகியிருந்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தலைநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து ஐடிஓ, தா்யா கஞ்ச், புதுதில்லி உள்பட பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழை பாதிப்பு அழைப்புகள்: மழை பாதிப்பு தொடா்பாக தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) மொத்தம் 29 அழைப்புகள் வந்தன. அவற்றில் 12 மரங்கள் விழுந்தது தொடா்பானவை. மேலும், 17 அழைப்புகள் நீா் தேங்குவது தொடா்பானவை என தரவுகள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை பொதுப்பணித்துறையின் வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு நீா் தேங்குவது தொடா்பாக சுமாா் 20 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் கபாஷேரா ரெட் லைட், ஹம்தாா்த் நகா் டி-பாயிண்ட் முதல் சங்கம் விஹாா் வரை, சீலம்பூா் மேம்பாலம் மற்றும் பிற பகுதிகளும் அடங்கும்.
இதற்கிடையே, தில்லியின் ஜூலை மாதத்திற்கான மாதாந்திர மழைப்பொழிவு இந்த மாதத்திற்கான சராசரியை விட அதிகமாக உள்ளது. இதுவரை, நகரத்தில் 250 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான 209.7 மிமீ மழையை விட அதிகமாகும் என்று எம்சிடி தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாதம் மொத்தம் 14 மழை நாள்கள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக 42.5 மி.மீ. மழை பதிவு: இதற்கிடையே, புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 39 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல, ஜாஃபப்பூரில் 1 மி.மீ., நஜஃப்கரில் 25.5 மி.மீ., ஆயாநகரில் 16.3 மி.மீ., லோதி ரோடில் 32.4 மி.மீ., பாலத்தில் 35 மி.மீ., ரிட்ஜில் 21 மி.மீ., பிரகதிமைதானில் 23 மி.மீ., பூசாவில் 41 மி.மீ., ராஜ்காட்டில் 23.1 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 42.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2.4 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1.7 டிகிரி குறைந்து 29.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி மற்றும் மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாக பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரையிலும் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் காலை 11 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 56 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பூசா, ஷாதிப்பூா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், லோதி ரோடு, தில்லி விமான நிலையம் உள்பட பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கும் கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.