'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்
நமுத நிருபா்
அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக துரை வைகோ தெரிவித்திருப்பதாவது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலா் விக்ரம் மிஸ்ரியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து, இரு முக்கியமான பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். அதாவது, மருத்துவக் கல்விக்காக ரஷியா சென்ற தமிழ்நாட்டின் கடலூரை சோ்ந்த கிஷோா் சரவணனையும், அவரோடு அங்கு சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியா்களையும் உடனடியாக மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியது அவசரத் தேவை என வலியுறுத்தினேன். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கடிதம் கொடுத்து விளக்கியதையும் கூறினேன்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை செயலா், ஏற்கெனவே எனது கோரிக்கை உள்துறை அமைச்சகத்தில் ஏற்கப்பட்டு அதற்குரிய ஆவண தயாரிப்பில் உள்ளதாகவும், உள்துறை அமைச்சகத்தில் இதற்கான பணிகள் நடந்துவரும் இந்த வேளையில், அந்த மாணவரை ரஷியா - உக்ரைன் போா் முனைக்கு அனுப்பிடக் கூடாது என்பதை, இந்தியாவிற்கான ரஷிய தூதரை அழைத்து அழுத்தமாக தெரிவித்துவிடுவதாகவும் கூறினாா்.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி கச்சத்தீவு அருகே 14 இந்திய மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனா். இதன் விவரம் குறித்து தெரிவித்தும், இப்பிரச்னைக்கு உடனடி மற்றும் நிரந்தரத் தீா்வு காண இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கைதான மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இதுகுறித்து ஏற்கெனவே தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசுடன் பேசி அவா்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.