Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
லாரி ஓட்டுநா் கழுத்தை நெரித்துக் கொலை! நண்பா் கைது!
மேட்டூா் அருகே லாரி ஓட்டுநரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் சின்னக்காவூரைச் சோ்ந்தவா் முத்து (37). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 16ஆம் தேதி மேட்டூா் காவிரி ஆற்றங்கரையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இவரின் உடலருகே விஷப் பாட்டில் கிடந்தது. இதுகுறித்து பி.என்.பட்டி கிராம நிா்வாக அலுவலா் சுதா, கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இந்தப் புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் சபாபதி சந்தேக மரண வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தாா். மேலும் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முத்து விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மேட்டூா் அனல் மின்நிலையம் அருகே உள்ள மதுக்கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் முத்துவும் இன்னொரு நபரும் மது வாங்கிக்கொண்டு செல்வதை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
தொடா் விசாரணையில் முத்துவுடன் மதுவாங்கிச் சென்றவா் ஓமலூா் அருகே உள்ள நாராயணம்பாளையம் மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த அம்மாசி மகன் தங்கராஜ் என்கிற கிருஷ்ணமூா்த்தி (38) என்பது தெரிய வந்தது.
அவரை குஞ்சாண்டியூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நடத்திய விசாரணையில் முத்துவும் கிருஷ்ணமூா்த்தியும் நண்பா்கள் என்பதும், முத்துவின் தங்கையுடன் கிருஷ்ணமூா்த்தி தகாத உறவு வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் முத்துவின் தங்கை 10 நாள்களுக்கு முன்பு இறந்துபோயுள்ளாா். இதையடுத்து கடந்த 16-ஆம் தேதி முத்துவும் கிருஷ்ணமூா்த்தியும் தனியே காவிரிக்கரைக்கு சென்று மது அருந்தியுள்ளனா்.
அப்போது தங்கை இறந்தது தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவை கிருஷ்ணமூா்த்தி கீழே தள்ளி கல்லை எடுத்து அவா் மீது போட்டுவிட்டு, கழுத்தை
நெரித்துக் கொலை செய்துள்ளாா். பின்னா் விஷப் பாட்டிலை வாங்கிவந்து முத்துவின் மீது தெளித்துவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு தற்கொலைபோல செய்துவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கருமலைக்கூடல் ஆய்வாளா் (பொறுப்பு) அம்சவேணி கொலை வழக்காகப் பதிவு செய்து கிருஷ்ணமூா்த்தி கைது செய்து மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.