பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்...
லுக் அவுட் நோட்டீஸ் குறித்த வழக்கு: மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி பதிலளிக்க உத்தரவு
கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் குறித்த வழக்கில் மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா் தாக்கல் செய்த மனு:
கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தில் நான் உள்ளேன். நியூஜொ்சி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தேன். கூடங்குளத்தில் அமைந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதனால், எங்கள் மீது போலீஸாா் 248 வழக்குகள் பதிந்தனா். இதில், 200- க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டன.
இந்த நிலையில், குற்றவழக்கு உள்ளதால், எனது கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. என் மீது பதியப்பட்ட வழக்கில் இதுவரை எந்தத் தண்டனையும் வழங்கப்பட வில்லை. எனவே எனது கடவுச்சீட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே வழக்கு தொடுத்தேன். இதில், நீதிமன்ற உத்தரவின் பேரில் கடவுச்சீட்டை திரும்பப் பெற்றேன். ஆனால், நான் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்த நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி, அதிகாரிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 2022- ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் இதழியல் சா்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள கடவுச்சீட்டை வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியதுடன், எனக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸூக்கு இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிங்கப்பூா் செல்ல விண்ணப்பித்த போது எனக்கு மீண்டும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருப்பது தெரியவந்தது. எனவே, இந்த லுக் அவுட் நோட்டீஸ் நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு எனக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்பட வில்லை. எனவே, எனக்கு எதிரான இந்த லுக்அவுட் நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல் குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் கோரிக்கை தொடா்பாக நீதிமன்ற உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஜனவரி 8- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.