உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!
வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
‘உமீத்’ வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (உமீத்) 1995-இன் வலைதளத்தை கடந்த ஜூன் 6-ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியது. நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து வக்ஃப் சொத்துகளின் விவரங்களை 6 மாதங்களுக்குள் அந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு முன்பாக வழக்குரைஞா் ஷாருக் ஆலம் வெள்ளிக்கிழமை வாதிட்டதாவது:
உமீத் வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வது தொடா்பான சில நிபந்தனைகளை தற்போதைய கட்டத்தில் பூா்த்தி செய்வது கடினம். எனவே அந்த வலைதளத்தில் பதிவு செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வக்ஃப் வழக்கில் 3 முக்கிய விவகாரங்கள் குறித்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்து, அந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவுத் துறை அனுமதி மறுக்கிறது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்யுமாறும், அந்தப் பதிவை யாரும் தடுக்கவில்லை என்றும் வழக்குரைஞரிடம் தெரிவித்தாா். உமீத் வலைதளத்தில் கட்டாயப் பதிவு குறித்து விசாரிப்பது பின்னா் பரிசீலிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.