கிருஷ்ணகிரியில் ஏப். 15-இல் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம்
வக்ஃப் நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றுவதன் மூலம் வக்ஃப் நிலங்களையும் பாஜக விற்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனையில், வக்ஃப் மசோதாவை எதிர்ப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து எம்பிக்களையும் அடுத்த 3 நாள்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சி கொறடாக்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த அகிலேஷ் யாதவ், சமாஜவாதி வக்ஃப் திருத்த ம்சோதாவை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது:
“இந்த மசோதா யாருக்காக கொண்டுவரப்படுகிறதோ அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதைவிட பெரிய அநீதி என்ன இருக்க முடியும்?
பாஜக நிலத்தை மிகவும் நேசிக்கும் கட்சி. ரயில்வே நிலத்தையும் பாதுகாப்புத் துறை நிலத்தையும் அவர்கள் விற்றார்கள். தற்போது வக்ஃப் நிலங்களையும் விற்பனை செய்வார்கள். இதெல்லாம் அவர்களின் தோல்விகளை மறைப்பதற்கான திட்டம்.
அரசியல் என்பது பகுதிநேர வேலை என்று உ.பி. முதல்வர் கூறுகிறார். அத்தகைய பகுதிநேரமாக வேலை செய்பவரை தில்லியில் இருப்பவர்கள் ஏன் நீக்கவில்லை?” என்றார்.
இதையும் படிக்க : ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.