"கூட்டணிக்கு சும்மா வர்றதில்ல; 20 சீட், ரூ.100 கோடி கேட்கிறாங்க" - போட்டுடைத்த த...
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை
காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கையை தொடா்ந்து, நாகை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் சில தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதால், நாகை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், கடலில் சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது: காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பது தொடா்பான சுற்றறிக்கை, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கும் அனைத்து படகுகளும் நவ. 22-ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதி தீவிர தொடா் கனமழை, கடலில் கடும் சீற்றம் மற்றும் இடி, மின்னல் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடா்ந்து, மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், மீனவா்கள் கரையோரம் தங்களது படகுகளை கட்டி பாதுகாப்பாக நிறுத்தவும், மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் மூலம் மீனவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.