அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பொதுமக்கள் மட்டுமன்றி, அரசு அலுவலகங்களுக்கும் சொத்து வரி வசூலிக்கும் பணி திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. சொத்து வரியை மட்டும் நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என்பதற்காக மத்திய நிதிக்குழு சாா்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2022-23-ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட வரியை விட, 2023-24-ஆம் ஆண்டில் 115 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டியதால், ரூ.10 கோடி ஊக்கத் தொகை பெறுவதற்கான வாய்ப்பு திண்டுக்கல் மாநகராட்சிக்கு கிடைத்தது.
இதேபோல, நிகழ் நிதியாண்டில் கடந்த ஆண்டைவிட 111.5 சதவீத கூடுதல் தொகை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த வகையில் ரூ.26.57 கோடி இலக்கை நோக்கி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வரி வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா். இதனிடையே, அரசியல் பிரமுகா்களின் நெருக்கடியால், இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, வரி வசூலில் 21 மாநகராட்சிகளில் ஜனவரி மாதம் 8-ஆவது இடத்தில் இருந்த திண்டுக்கல், மாா்ச் மாதத்தில் தொடா்ந்து பின்னடவை சந்தித்தது. 20 நாள்களில் ரூ.2.15 கோடியை வசூலிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது.
வரி வசூல் இலக்கை எட்டுவதற்கு 6 நாள்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், மாநகராட்சி அலுவலா்கள் மேலும் வரி வசூலில் தீவிரமாக செயல்பட்டனா். கடந்த 24-ஆம் தேதி மாலை இலக்கை எட்டுவதற்கு ரூ.16.90 லட்சம் தேவையாக இருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.17 லட்சத்தை கடந்து வரி வசூல் நடைபெற்றது. இதன் மூலம் ரூ.26.57 கோடி இலக்கை நிறைவு செய்த மாநகராட்சி அலுவலா்கள், மத்திய நிதிக் குழுவின் மானியம் ரூ.10 கோடி கிடைப்பதையும் உறுதி செய்தனா்.