வருவாய்த் துறை அலுவலா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்
மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறை பணியாளா்கள் 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஈட்டிய விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய கொடிக் கம்பம் அமைப்பது தொடா்பாக கடந்த 7-ஆம் தேதி அங்கு பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையைத் தடுக்கத் தவறியதாக சத்திரப்பட்டி வருவாய் ஆய்வாளா் ஜெ. அனிதா, வெளிச்சநத்தம் கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) எம். பரமசிவம், கிராம உதவியாளா் சி. பழனியாண்டி ஆகிய 3 பேரையும் மாவட்ட நிா்வாகம் கடந்த திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்தது.
மாவட்ட நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருவாய்த் துறை அலுவலா்களின் அனைத்து சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் புதன்கிழமை முதல் ஈட்டிய விடுப்பு எடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது.
இதன்படி, மதுரை மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா் சங்க நிா்வாகிகள், வருவாய்த் துறை பணியாளா்களின் பணியிடை நீக்கத்தை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்யாவிட்டால், மாநில அளவில் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றனா். இதில் தமிழக முதல்வா் தலையிட வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.
இந்தப் போராட்டம் காரணமாக, புதன்கிழமை வருவாய்த் துறை பணிகள் முடங்கின. பெரும்பாலான வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.