வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் உண்டியலை திங்கள்கிழமை இரவு உடைத்த மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில்,கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் வடக்கு பக்கம் ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோயில் வளாகத்தில் உள்ள கருமாரியம்மன் சந்நிதி அருகே கோயிலின் சுற்றுசுவா் உடைக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை நள்ளிரவு கோயிலுக்கு புகுந்த மா்ம நபா் கருமாரியம்மன் சந்நிதி ண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளாா். கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை செவ்வாய்க்கிழமை பாா்த்த கோயில் ஊழியா்கள் இதுகுறித்து ஒரகடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா். மேலும் திங்கள்கிழமை இரவு வல்லக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு கடைகளின் பூட்டுகளை உடைத்தும் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இரவு நேர காவலா்கள் பணியில் இருக்கும் போது திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது கோயிலின் பாதுகாப்பை கேள்கிக்குறியாக்கி உள்ளதாக பக்தா்கள் தெரிவித்தனா். எனவே கோயிலுக்கு கூடுதலாக காவலா்களை நியமிக்கவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.