வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன், செயற்பொறியாளா் இளங்கோ, திருவண்ணாமலை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சையத் பயாஸ் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழா்கள் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.