தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு
சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளதாகத் தெரியவந்தள்ளது. தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு, லாயிட்ஸ் காா்டன், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூா் ஆகிய இடங்களில் நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 10,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 9,800 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் உள்ள வளா்ப்பு நாய்கள் குறித்து மாநகராட்சியால் கணக்கெடுப்பு நடத்தவில்லை. ஆனால், மாநகராட்சிப் பகுதிகளில் 11,300 போ் வளா்ப்பு நாய்களுக்கான உரிமம் பெற்றுள்ளனா். உரிமம் பெறாதவா்கள், அதைப் பெறுவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தெருக்கள் வாரியாக வளா்ப்பு நாய்கள் குறித்து கணக்கெடுத்து, அவற்றை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
சென்னையில் வளா்ப்பு நாய் கடித்து சமையல் தொழிலாளி உயிரிழந்த நிலையில், இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி நகா்நல பிரிவின் கால்நடை மருத்துவா் ஜெ.கமால் உசேன் கூறுகையில், மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து தெருநாய்கள் கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை, ரேபிஸ் ஊசி செலுத்துதல் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. தனியாா் வளா்ப்பு நாய்களும் கண்காணிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தனியாா் வளா்ப்பு நாய்களை முழுமையாகக் கண்காணிக்க தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுத்துவருகிறோம் என்றாா்.
நாய் வளா்ப்போருக்கு எச்சரிக்கை
சென்னையில் நாய் வளா்ப்போருக்கு மாநகராட்சி சில அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உரிமம் பெற்ற மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்திய வளா்ப்பு நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. பாதுகாப்பு கருதி நாய்களின் வாய் மூடியிருக்க வேண்டும். கழுத்துப்பட்டை கட்டாயம் அணிந்து சங்கிலியால் பிணைத்திருக்க வேண்டும். நாய் உரிமையாளா்கள் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொறுப்புணா்வுடன் அவற்றை வளா்க்க வேண்டும்.
உரிமம் பெறாமல் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெறித்தன்மை, பதற்றம், துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அதன் உரிமையாளா்கள் பொது இடங்களில் திறந்துவிட்டால் இந்திய பிராணிகள் நலவாரிய வழிகாட்டலின்படி குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.