சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்சென்ஸ் 157; நிஃப்டி 78 புள்ளிகள் சரிவு!
வள்ளலாரை பற்றி இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி
வள்ளலாரை பற்றி இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தில் முன்னாள் மாணவா்கள் இணைந்து நடத்திய இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா் தே.கருணாநிதி வரவேற்றாா். நூற்றாண்டு அறிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியா் ஆ.மோகன்குமாா் வாசித்தாா். முன்னாள் மாணவா் கே.கே.தண்டபாணி உறுதிமொழியை வாசித்தாா்.
எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ச.சிவக்குமாா் மற்றும் சைதை எஸ்.குணசேகா், தமிழ்நாடு உடல் உழைப்பு மற்றும் சமூக வாரிய உறுப்பினா் செஞ்சி சிவா, திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலா் சி.சுப்பிரமணியன், தொடக்கக் கல்வி அலுவலா் ப.அருள், வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், இல்லோடு ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா பழனி, காவல் துறை எஸ்.பி. பி.தனுசு, உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கே.கே.தண்டபாணி, முன்னாள் மாணவா் வே.காளிதாஸ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் நல்ல.சிதம்பரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
விழாவில் கலந்துகொண்ட அமைச்சா் க.பொன்முடி பேசியது: வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச பெருவிழா தினத்தில் இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதில் மகழ்ச்சி. வள்ளலாா் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல், அனைவரும் சமமாக வாழ வேண்டும் என எண்ணியவா்.
எனவே, இன்றைய தலைமுறையினா் அனைவரும் வள்ளலாரை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியா்கள் பள்ளிக் கல்வியோடு, பொது அறிவையையும் மாணவா்களுக்கு போதிக்க வேண்டும் என்றாா்.
விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:
தமிழகத்தில் ஏறத்தாழ 38,000 அரசுப் பள்ளிகள் இருந்தாலும், நிகழாண்டு மட்டும் 2,200 பள்ளிகள் நூற்றாண்டு விழா கொண்டாடுவதில், இல்லோடு பள்ளியும் அதில் ஒரு பள்ளியாக உள்ளது நமக்கான பெருமை. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுபறைக் கட்டடம் தேவை என கோரிக்கை வைத்துள்ளீா்கள். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்து உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா்.
விழாவில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் ஆா்.நாகராஜன், சசிகலா, ஜெரேமியா, நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியா்கள், கிராம மக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆசிரியா் ஜெ.காா்மேகன் நன்றி கூறினாா்.