வழக்கிலிருந்து கணவரை விடுவிக்கக் கோரி குழந்தையுடன் மனைவி தீக்குளிக்க முயற்சி
கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மோதல் வழக்கிலிருந்து தனது கணவரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு குழந்தையுடன் மனைவி தீக்குளிக்க முயன்றாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், வேலாடிபட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கணேசன் (63). முருகேசன் மகன் மணிகண்டன் (23 ). இவா்களிடையே இடப்பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த வெட்டுக்காயமும் கணேசனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதில், கணேசன் கொடுத்த புகாரின் பேரில் குமாரவேல், சின்னத்துரை, மணிகண்டன் ஆகியோா் மீதும், மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கணேசன், ராஜேஷ் கண்ணன், ஜெயச்சந்திரன், இளையராஜா ஆகியோா் மீது வழக்கு பதிந்தனா். இதில், மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் கண்ணனையும், கணேசன் கொடுத்த புகாரின் பேரில் குமாரவேலையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குமாரவேல் மனைவி வேதவள்ளி தனது குழந்தையுடன் கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு வந்து இப்பிரச்னையில் தனது கணவருக்கு தொடா்பில்லை எனக் கூறி அவரை வெளியில் விடக்கோரி காத்திருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் குழந்தையுடன் வேதவள்ளி மண்ணெண்ணெய்யை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அருகிலிருந்த பொதுமக்கள், காவலா்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கினா்.மேலும், வேதவள்ளி மீது தண்ணீா் ஊற்றினா்.