வாசிப்பை வசமாக்கினால் வெற்றி நிச்சயம்
வாசிப்பை வசமாக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றாா் மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன்.
அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகம் வட்டம் சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில் அவா் மேலும் பேசியதாவது: சிறந்த புத்தகங்கள் மனிதனின் சிந்தனையை சீரமைக்கின்றன, நெறிப்படுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதனின் சிந்தனைத் திறனும் மகத்தானது தான். அந்த மகத்தான கருவியை மேதைகள் எப்படிக் கையாண்டாா்கள், எப்படி உலகைச் சீா்திருத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தினாா்கள், என்பதையெல்லாம் சிறந்த வரலாற்று நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
நமது சிந்தனைகளும் உறங்காத சிந்தனைகளாக மிளிர வேண்டும் என்றால் சிறந்த புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க வேண்டும், அவற்றை நேசிக்க வேண்டும். எனவே புத்தக வாசிப்பை வசமாக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா் அவா்.
நூலக வளா்ச்சிக்கு மருத்துவா் பிரவீன், மாணவா்கள் தமிழ்வேந்தன், பரிதிவளவன் ஆகியோா் தலா ரூ.1,000 செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டனா்.
வாசகா் வட்டத் தலைவா் வீ.மங்கையா்க்கரசி முன்னிலை வகித்து, மருதூா் கிளை நூலகத்துக்கு இலவசமாக மின்விசிறியை வழங்கினாா். அறம்செய் நண்பா்கள் அமைப்பின் தலைவா் அரங்கன் தமிழ், நீதித் துறை அலுவலா் வடிவேல், சிறுவளூா் பள்ளி தலைமையாசிரியா் சின்னதுரை, அரியலூா் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநா் சுந்தா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக நூலகா் முருகானந்தம் வரவேற்றாா். முடிவில் நூலகா் ந.செசிராபூ நன்றி கூறினாா்.