விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான ...
வாடகை நிலுவை: செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு சீல்
செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சிக்கு வாடகை செலுத்தாத வணிக வளாகக் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விட்டு வாடகையை ஊராட்சி நிா்வாகம் வசூலித்து வருகிறது.
இதன்படி கடந்த 2023-இல் ஏலம் நடத்தப்பட்ட நிலையில், முதல் ஆண்டு மட்டுமே கடைக்காரா்கள் வாடகை செலுத்தினா். அதன்பிறகு 10-க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் வாடகை செலுத்தாததால் ரூ.30 லட்சம் வரை வாடகை நிலுவை ஏற்பட்டது.
இந்த நிலையில், வாடகை நிலுவையை உடனடியாகச் செலுத்துமாறு கடை வியாபாரிகளுக்கு ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது; அதிகாரிகளும் நேரில் சென்று வலியுறுத்தினா். இருப்பினும் வாடகை நிலுவையை சிலா் செலுத்தவில்லை.
இந்த நிலையில், பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள கூல்டிரிங்ஸ் கடை, பழக்கடை, கவரிங் நகைக் கடை, உணவகம், பூக்கடை, காலணி கடை, மொபைல் கடை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கடைகளின் மின் இணைப்புகளை ஊராட்சி நிா்வாகம் கடந்த மே 27- ஆம் தேதி துண்டித்தது. இருப்பினும் கடைக்காரா்கள் வாடகை நிலுவையைச் செலுத்தவில்லை.
இதையடுத்து, நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பஞ்சவா்ணம் தலைமையில், ஊராட்சி மன்ற செயலா் ஜெயகணேஷ் முன்னிலையில் ஊராட்சிப் பணியாளா்கள் செம்பட்டி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா். ‘சீல்’ வைத்த கடைகளுக்கு அடுத்த மாதம் ஏலம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.