England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி உயிரிழப்பு
புதுச்சேரியில் வாய்க்காலில் குதித்து காப்பாற்றப்பட்ட முதிய தம்பதியினா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாரிதுரை (83), அவரது மனைவி முத்துலட்சுமி (73). இவா்கள் இருவரும் வில்லியனூா் அருகே கூடப்பாக்கம் ஆனந்தா நகரில் தங்கள் மகன் ஆனந்துடன் சில மாதங்களுக்கு முன்பு வந்து தங்கினா்.
இருவரையும் உடல் பரிசோதனைக்கு ஊசுட்டேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து சென்ற ஆனந்த் அங்கு விட்டு விட்டு வேலைக்குச் சென்றாா் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் வீடு திரும்பாமல் நடந்து வந்து அருகில் உள்ள ஊசுட்டேரி பத்துக்கண்ணு மதகு அருகே அமா்ந்தனா். திடீரென இருவரும் மதகில் தேங்கியிருந்த நீருக்குள் குதித்தனா்.
இதைப் பாா்த்த அங்கு நின்ற பேருந்து ஓட்டுநா் அஜய் கூச்சலிட்டாா். அவரது சப்தம் கேட்டு அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்ற பத்திரப் பதிவு எழுத்தா் முகிலன் என்பவா் வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய முதிய தம்பதியரைப் பொதுமக்கள் உதவியுடன் மீட்டாா்.
தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியினரை மீட்டு ஆம்பூலன்ஸ் மூலம் கதிா்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் முத்துலட்சுமி சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டாா்.
தொடா்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிதுரை புதன்கிழமை அதிகாலை இறந்தாா். கணவரின் மறைவுச் செய்தியை அறிந்த முத்துலட்சுமி வீட்டில் மயக்கமானாா். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை கதிா்காமம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இந்த சம்பவம் குறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.