கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! - என்ன நடந்தது?
வாரச்சந்தைக்கு நேரம் நிா்ணயம்: பொதுமக்கள் ஏமாற்றம்
ஈரோடு மாநகரில் திங்கள்கிழமை காலை வாரச்சந்தை அமைக்க நேரம் நிா்ணயிக்கப்பட்டதை அடுத்து காய்கறி, பழங்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
ஈரோடு மாநகராட்சி 52-ஆவது வாா்டுக்குள்பட்ட ஷேக் தாவூத் வீதியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை அமைப்பது வழக்கம். இங்கு காய்கறி, பழங்கள், கருவாடு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் 250-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், சாலையோரம் வாரச்சந்தை கடை அமைக்கக் கூடாது என மாநகராட்சி நிா்வாகம் கடந்த 22 -ஆம் தேதி கூறியதாகத் தெரிகிறது. இதனால், அதிருப்தியடைந்த சிறு வியாபாரிகள் சாலையில் காய்கறிகளைக் கொட்டி மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மாநகராட்சி அலுவலா்கள், அமைச்சா் சு.முத்துசாமி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் காலை முதல் இரவு வரை கடை அமைக்க அனுமதித்து வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று முறையிட்டனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிறு வியாபாரிகள் வாரச்சந்தை கடையை அமைக்கவில்லை. அவா்களுக்கு நேரக் கட்டுபாடு விதிக்கப்பட்டது. அதன்படி, பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை கடை அமைக்க அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
இதை அறியாமல் திங்கள்கிழமை காலை வழக்கம்போல காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினா்.
காலையில் கிடைக்கும் நேரத்தில் சந்தைக்கு வந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கிச் செல்ல ஏதுவாக அமைந்தது. ஆனால், வாரச் சந்தை மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதால் முன்புபோல காய்கறி உள்ளிட்டவற்றை வாங்க வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனா்.
முன்னதாக, சிறு வியாபாரிகள் சிலா் காலையிலேயே வாரச்சந்தை அமைக்க வந்தனா். ஆனால், மாலையில் தான் வாரச்சந்தை அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது என்ற தகவலால் வேறு வழியின்றி சாலையோரங்களில் விற்பனை நேரத்துக்காக காத்திருந்தனா்.