பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1,777 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு
கூட்டுறவுத் துறை மூலம் 2025-26- ஆம் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.1,177.30 கோடி ஆண்டு குறியீடு நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், 31.8.2025 வரை 15,687 விவசாயிகளுக்கு ரூ.202.88 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ப.கந்தராஜா தெரிவித்துள்ளாா்.
கூட்டுறவுத் துறையானது கிராமப்புற ஏழை, எளிய, விவசாய பெருமக்களுக்கு பயிா்க் கடன் மற்றும் உரம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதிலும், இதர அனைத்து பிரிவினருக்கும் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய காலக்கடன், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் ஆதிதிராவிடா் பொருளாதார மேம்பாட்டுக் கடன், சுயஉதவிக் குழு கடன் ஆகியவற்றை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 923 முழுநேர நியாய விலைக் கடைகள், 339 பகுதி நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1,262 நியாய விலைக் கடைகள் மற்றும் 89 நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசால் வழங்கப்படும் விலையில்லா அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மற்றும் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை மானிய விலையில் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் மாவட்ட அளவில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகமும், பொது விநியோகத் திட்டத்துக்கு என மண்டல அளவில் துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) அலுவலகமும் சரக அளவில் ஈரோடு மற்றும் கோபி சரக துணைப் பதிவாளா் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின்கீழ் மண்டல இணைப் பதிவாளா் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்டவாறு கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 28 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 157 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 50 பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்கள் குறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ப.கந்தராஜா கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 2023-24-ஆம் நிதியாண்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த டாம்கோ மூலம் 199 பேருக்கு ரூ.147 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மூலம் 64 பேருக்கு ரூ.317 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் 72 பேருக்கு ரூ.65 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2024-25-நிதியாண்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட டாம்கோ மூலம் 155 பேருக்கு ரூ.1.11 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மூலம் 480 பேருக்கு ரூ.3.33 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தாட்கோ ஆணையம் மூலம் 26 பேருக்கு ரூ.35 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2025-26 -ஆம் நிதியாண்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட டாம்கோ மூலம் 425 பேருக்கு ரூ.253.87 லட்சம் கடன் உதவி கோரி அரசிடம் முன்மொழிவு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
டாப்செட்கோ மூலம் 769 பேருக்கு ரூ.518.49 லட்சம் கடன் உதவி கோரி முன்மொழிவு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. தாட்கோ ஆணையம் மூலம் 788 பேருக்கு ரூ.838.87 லட்சம் உதவி கோரி முன்மொழிவு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
2025-26 -ஆம் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.1,177.30 கோடி ஆண்டு குறியீடு நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், 31.8.2025 வரை 15,687 விவசாயிகளுக்கு ரூ.202.88 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு நடப்பு நிதியாண்டில் 31.8.2025 வரை 322 பேருக்கு ரூ.3.81 கோடி மதிப்பில் பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வா் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாா்.