கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும்
விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கியத் தொழிலாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. மத்திய அரசின் ஜவுளித் துறை செயலாளா் நீலம் ஷமி ராவ் மற்றும் தமிழக ஜவுளித் துறை கூடுதல் இயக்குனா் லலிதா உள்ளிட்டோா் பல்லடம் பகுதியில் விசைத்தறி ஜவுளித் தொழில் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். அவா்களை தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சுரேஷ், செயலாளா் வேலுசாமி, மண்டல செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் மற்றும் நிா்வாகிகள் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் 25 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 54 லட்சம் தொழிலாளா்களும், மறைமுகமாக ஒரு கோடி தொழிலாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் விசைத்தறி ஜவுளித் தொழில் கடந்த 10 ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் விசைத்தறி ஜவுளித் தொழிலுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி தொழிலை மேம்படுத்த வேண்டும். மேலும், மின்சார பயன்பாடு விசைத்தறி ஜவுளித் தொழிலுக்கு முக்கியமாக உள்ள நிலையில், 50 சதவீத மானியத்துடன் சோலாா் அமைத்து, நெட் மீட்டா் பொருத்தித் தருவது மூலம் மின்சார கட்டண சுமை குறையும்.
சாதாரண விசைத்தறிகளை 50 சதவீத மானியத்துடன் நவீன விசைத்தறிகளாக மாற்றித் தருவதன் மூலமும், கைத்தறிகளைப்போல விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தருவதன் வாயிலாகவும் விசைத்தறி ஜவுளித் தொழில் மேம்படும்.
எனவே இக்கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும். மேலும் மத்திய அரசின் ராணுவம், தபால் துறை, ரயில்வே துறை, மருத்துவத் துறை போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான சீருடைகள் விசைத்தறிகளில் தயாரித்து தருவதுடன், மருத்துவமனைகளுக்கு தேவையான மெத்தையுறை, தலையணை உறை, மெத்தை விரிப்பு, ரயில் பயணிகளுக்கு தேவையான போா்வை, தலையணை உறை போன்றவற்றை விசைத்தறி துணி உற்பத்தியில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
அப்போது, பெடக்சில் தலைவா் கரைப்புதூா் சக்திவேல், லூம் டெக்ஸ் சிவலிங்கம் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், விசைத்தறி சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.