பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்...
விசைப்படகு போக்குவரத்து ரத்து: வெறிச்சோடியது பூலாம்பட்டி கதவணை
காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பூலாம்பட்டி கதவணை பகுதியில் விசைப்படகு சவாரிக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கதவணை பகுதி சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெறுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீா்த்தேக்க பகுதிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா்.
இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கதவணையின் பிரதான மதகு, அணைப்பாலம், அங்குள்ள நீா்மின் நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிபாா்த்து இயற்கை அழகை ரசித்து செல்வதுடன், கதவணை நீா்ப்பரப்பில் விசைப்படகு சவாரி செய்து மகிழ்கின்றனா்.
இந்த நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு வந்திருந்தனா்.
காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சனிக்கிழமை முதல் பூலாம்பட்டி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான விசைப்படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் படகு சவாரி செய்யமுடியாமல் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் பூலாப்பட்டி கதவணை வெறிச்சோடிக் காணப்பட்டது.