விஜயநகரில் மே 20-இல் காங்கிரஸ் அரசின் 2ஆம் ஆண்டு விழா
மைசூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற 2 ஆம் ஆண்டு விழாவை மே 20ஆம் தேதி விஜயநகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியா -பாகிஸ்தான் இடையே சண்டை நடந்து வந்ததால், கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்த 2ஆம் ஆண்டு விழாவை தள்ளிவைப்பது என்று அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம். அப்போது போா் நிறுத்தம் அறிவிக்கப்படாததால், அந்த முடிவை எடுத்திருந்தோம். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு தெரிவிக்கும்படி காங்கிரஸ் பொதுச் செயலாளா்கள் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோரிடம் கூறியிருந்தோம். தற்போது போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 2ஆம் ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதற்காக மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தியின் தேதியை கேட்டிருக்கிறோம். அனேகமாக, மே 20ஆம் தேதி விஜய நகரில் 2ஆம் ஆண்டு விழா நடத்தப்படும்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அமைச்சரவை மாற்றம் இருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிப்போம். 2ஆம் ஆண்டு விழாவில் நிலமற்றவா்களுக்கு ஒரு லட்சம் பட்டா வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
முன்னதாக, பெங்களூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:
‘மே 20ஆம் தேதி விஜய நகரில் காங்கிரஸ் அரசின் 2ஆம் ஆண்டு விழா நடத்தப்படும். எல்லையில் நிலவிய சூழலை மனதில் வைத்து இந்த விழாவை ஒத்திவைத்திருந்தோம். ஆனால், போா் நிறுத்தம் அறிவித்துள்ளதால், விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். எல்லா மாவட்ட அமைச்சா்களும் தொகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்க கூறியுள்ளோம்.
சாதனை விழாவில் ஒரு லட்சம் பட்டா வழங்கப்படும். இந்த விழாவுக்கு கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தியை அழைக்க இருக்கிறோம் என்றாா்.