விடாமுயற்சி, வீர தீர சூரன் வெற்றிப்படங்கள் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்
இந்தாண்டு வெளியான திரைப்படங்களின் வெற்றி, தோல்வி குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்தாண்டு இதுவரை வெளியான திரைப்படங்களில் ஒரு சில படங்களே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, சிறிய பட்ஜெட்களில் உருவான குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.
இதுகுறித்து, நேர்காணலில் பேசிய திரைப்பட விநியோகிஸ்தர், திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம், “சின்ன படங்களாக இருந்தாலும் கதையம்சமுள்ள படங்களே வெற்றிகளைப் பெறும். இன்றைய ரசிகர்களை புரமோஷன் மூலம் ஏமாற்ற முடியாது. விடாமுயற்சி, வீர தீர சூரன் ஆகிய படங்கள் வெற்றிப்படங்கள் இல்லை. விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தைக் கொடுத்த படங்கள். பெரிதாக வசூலையும் செய்யவில்லை.
வீர தீர சூரன் வெற்றி என விக்ரமுக்கு பெரிய மாலையாகப் போட்டார்கள். உண்மையில், அப்படம் வெற்றிப்படமே இல்லை. இது தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருப்பவர்களே நன்றாகத் தெரியும். ஆனாலும் அதன் வெற்றியைக் கொண்டாடினர்.
முக்கியமாக, படத்தின் தமிழ்நாடு விநியோகிஸ்தர் பெரிய நஷ்டத்தையே சந்தித்தார். இல்லையென்று சொல்வாரா? ஏன் பொய்யாக ஒரு படத்தைக் கொண்டாட வேண்டும்? ஒரு படம் வெற்றியா இல்லையா என்பதை படத்தின் நாயகரிடம் சொல்ல வேண்டும். பெருமைக்காக போலித்தனமாக வெற்றி விழாக்கள் நடத்தக்கூடாது.
வாழை, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களே சிறப்பாக வசூலித்திருக்கின்றன. அப்படங்களுக்கு வெற்றிவிழா நடத்துங்கள் அதுதான் சரியானது” என்றார்.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி இழப்பீடு வேண்டும்... சிக்கலில் சந்தானம் படம்!