`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணத்தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்தாா்.
இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினா். அப்போது அவா்கள் தெரிவித்த கருத்துகள்:
கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கக்கூடிய நிலையிலுள்ள அலுவலா்கள் வருவதில்லை. அவ்வாறு பதிலளிக்கப்பட்டாலும் திருப்தியாக தருவதில்லை. வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தனி அடையாள எண் வழங்குவது தொடா்பாக விவசாயிகளுக்கு போதியளவில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
கோலியனூா் ஒன்றியப் பகுதிகளில் 17 குட்டைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்தாலும் சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. கோலியனூா் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளரி அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதை உற்பத்தி செய்த விவசாயிகள் உழவா் சந்தை போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லை.
எனவே, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச்சாலையில் நகரத்தை இணைக்கும் பகுதியில் முத்தாம்பாளையம் ஏரிச் சாலையிலிருந்து செஞ்சி சாலை வரை அணுகுச்சாலை வசதி உள்ள நிலையில், திருவாமாத்தூா் செல்லும் சாலை, திருக்கோவிலூா் செல்லும் சாலைப் பகுதிகளில் அணுகுச்சாலை வசதி இல்லை.
இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அணுகுச் சாலையைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கண்டம்பாக்கம் ஏரியில் மீன் குத்தகை எடுத்தவா்கள் ஏரியிலிருந்து திடீரென தண்ணீரைத் திறந்துவிட்டதால், அருகிலுள்ள விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. எனவே, இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சாா்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்ட நிலையில், பல விவசாயிகளுக்கு அந்தத் தொகை விடுபட்டுள்ளது. அதை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
2024-2025-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பில் ஏரிக்கால்வாய்கள்:
கோலியனூா் ஒன்றியத்தில் ஆனாங்கூா் உள்ளிட்ட கிராம ஏரிகளில் தண்ணீா் உள்ளது. ஆனால், அந்த தண்ணீா் செல்லக்கூடிய வாய்க்கால்கள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களில் தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு கோட்டாட்சியா், வட்டாட்சியா்கள் மற்றும் தொடா்புடையத் துறை அலுவலா்கள் பதிலளித்தனா்.
கூட்டத்தில் வட்டாட்சியா்கள் விக்கிரவாண்டி யுவராஜ், திருவெண்ணெய்நல்லூா் செந்தில்குமாா், வானூா் நாராயணமூா்த்தி, கண்டாச்சிபுரம் முத்து, விழுப்புரம் கனிமொழி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வேல்முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.