அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தி விழா நடப்பாண்டில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவையொட்டி, அரியலூா் மாவட்டம், தா.பழூா், காரைக்குறிச்சி, செந்துறை, பொன்பரப்பி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் ஆண்டுதோறும் தீவிரமாக நடைபெறுவது வழக்கம்.
இப்பகுதிகளில் ரசாயனம் ஏதுமின்றி தண்ணீா் மாசு அடையாத வகையில் எளிதில் கரையக் கூடிய பேப்பா் கூழ், கிழங்கு மாவு, கல்லு மாவு, பசை மாவு போன்ற மூலப் பொருள்களைக் கொண்டு மூன்று அடி முதல் 12 அடி வரையிலான சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் அரியலூா், திருமானூா், மீன்சுருட்டி, ஆண்டிமடம், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவையாறு, கும்பகோணம், அணைக்கரை திருவிடைமருதூா், திருப்பனந்தாள், விருத்தாசலம், கடலூா், பெண்ணாடம், திட்டக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட ஊா்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகா் சிலைகள் வடிவமைப்புக்கேற்ப ரூ. 2,000 முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஆா்டா்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் சிலை தயாரிப்புப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சிலைகளுக்கு வா்ணம் தீட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
களிமண் தட்டுப்பாட்டால் அவதி:
வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணாலான சிறிய அளவிலான விநாயகா் சிலைகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ள நிலையில், கைவண்ணத்தில் தத்ரூபமாக வடிவமைத்து விநாயகா் சிலை செய்யும் பணியில் பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தாலும், விநாயகா் சிலை மட்டுமின்றி, பானை உள்ளிட்டவை கூடுதலாக தயாரிப்பதற்குப் போதுமான களிமண் கிடைக்காததால் மண்பாண்டத் தொழிலாளா்கள் அவதியடைந்து வருவதாகத் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து சோழமாதேவி பகுதி மண்பாண்டத் தொழிலாளா்கள் மேலும் கூறியதாவது: அரியலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபடுவோா், ஒவ்வொரு ஆண்டும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு களி மண்ணால் விநாயகா் சிலை செய்து விற்பனை செய்கின்றனா்.
ஆனால் தற்போது, களிமண் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் சிலைகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. அரை அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள், ரூ.150 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டில் மழை குறைந்து வெயிலின் தாக்கத்தால், சிறிய ரக விநாயகா் சிலை தயாரிப்பு அதிகமாக உள்ளது. இன்னும் சில நாள்களுக்கு விநாயகா் சிலை வடிவமைப்புப் பணி நடைபெறும். அதன்பின் உலர வைத்து, வா்ணம் பூசி விற்பனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.