அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விபத்துப் பகுதி கருப்புப் பட்டியலில் இருந்து ஜி-காா்னரை நீக்க நடவடிக்கை! -துரை வைகோ எம்.பி. உறுதி
அடிக்கடி விபத்து ஏற்படும் ஜி-காா்னா் பகுதியை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும், அங்கு சுரங்கப் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.
ஜி-காா்னரில் சுரங்கப்பாதை அமைப்பது தொடா்பாக மதுரையில் நெடுஞ்சாலைத் துறை உயா் அலுவலா்களை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய துரை வைகோ பின்னா் கூறியது:
விபத்துகளுக்கான கருப்புப் பட்டியலில் இருந்து ஜி- காா்னா் பகுதியை நீக்கவும், மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க வாகனங்கள் சுரங்கப் பாதை மூலமாக செல்லும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்காக கடந்தாண்டு அக்டோபரில் மதுரை ரயில்வே கோட்டத்தில் கோரிக்கை மனு அளித்தேன்.
தொடா்ந்து, ஜன.11ஆம் தேதி நடைபெற்ற திருச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகள் திட்டக் குழு கூட்டத்திலும் இதை வலியுறுத்தினேன். ஜன.25ஆம் தேதி ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஜி-காா்னா் பகுதியை ஆய்வு செய்தேன்.
தொடா்ந்து புதுதில்லியில் பிப்.6 ஆம் தேதி மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தினேன். தற்போது மதுரை கோட்ட அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலா் கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் பிரவீன்குமாா் ஆகியோரையும் சந்தித்து சுரங்கப் பாதைத் திட்டம் குறித்து வலியுறுத்தினேன். மீண்டும் புதுதில்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து கட்டுமானப் பணிகளை தொடங்க வலியுறுத்துவேன்.
எனவே விரைவில் ஜி - காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு, கருப்புப் பகுதி என்ற பெயா் நீங்கி, விபத்தில்லா பகுதியாக மாறும் என நம்புகிறேன் என்றாா் அவா்.