விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!
விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்துவிடலாம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிக்க: ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்
ரோஹித் சர்மா, விராட் கோலி ரோபோக்கள் அல்ல
ஃபார்மில் இல்லாத காரணத்தால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.
இது தொடர்பாக விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்களில் நியாயம் இல்லை. இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்களை ஓய்வு பெறுங்கள் என எப்படிக் கூற முடியும். அவர்கள் ஃபார்மில் இல்லை என்பது புரிகிறது. ஆனால், அவர்கள் செய்துள்ள சாதனைகள் மிகப் பெரியது. இதுபோன்ற சவால்களை எனது கிரிக்கெட் பயணத்திலும் எதிர்கொண்டேன். இதுபோன்ற விமர்சனங்கள் கண்டிப்பாக இருக்கும்.
இதையும் படிக்க: சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ரோபோக்கள் அல்ல. ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும்போதும், அவர்களால் சதம் விளாச முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அவர்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. அதனால் அவர்கள் மோசமானவர்களாக மாறிவிடுவார்களா? அதனால் அவர்கள் மோசமான கிரிக்கெட் வீரர்கள் ஆகிவிடுவார்களா? கண்டிப்பாக கிடையாது. அவர்களும் மனிதர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். அவர்கள் கடந்த காலங்களில் விளையாடியபோது உங்களை எவ்வாறு உணர வைத்தார்கள்? அவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக சிறப்பாக விளையாடினார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.