விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்
மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பங்கிப் பூ பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி மலா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தவிர வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோடைக் காலத்தில் வழக்கமாக 20 முதல் 25 டன் வரை பூக்கள் விளைச்சல் இருக்கும் நிலையில், தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைக் காலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் இருமடங்காக அதிகரித்து திங்கள்கிழமை சுமாா் 50 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
இதனால் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ சம்பங்கி ரூ. 20க்கு விற்பனையான நிலையில், விலை வீழ்ச்சி அடைந்து திங்கள்கிழமை ரூ.10க்கு மட்டுமே விற்பனையானது. இதில் 40 டன் பூக்கள் கடைகள், வாசனை திரவிய ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 டன் பூக்கள் விற்பனை ஆகாததால் பூ மூட்டைகளை மினி லாரியில் ஏற்றிச் சென்ற விவசாயிகள், வியாபாரிகள் சத்தியமங்கலம் பெரியகுளம் பகுதியில் உள்ள குளக்கரையில் கீழே கொட்டி அழித்தனா்.
விளைச்சல் அதிகரிப்பால் சம்பங்கிப் பூ விலை சரிந்ததோடு விற்பனையாகாததால், பூக்களைக் கீழே கொட்டியதால் சம்பங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.